மருத்துவக்கல்லூரி தொடங்க உடனடியாக நிதி ஒதுக்க வலியுறுத்தல்


மருத்துவக்கல்லூரி தொடங்க உடனடியாக நிதி ஒதுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Nov 2019 10:15 PM GMT (Updated: 6 Nov 2019 8:30 PM GMT)

விருதுநகரில் மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இதற்கான ரூ.325 கோடி நிதி ஒதுக்கீட்டினை நடப்பு நிதி ஆண்டிலேயே மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், 

விருதுநகரில் கடந்த 8 ஆண்டுகளாக மருத்துவக்கல்லூரி தொடங்கும் திட்டம் முடங்கி கிடந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த முறை பிரதமரை டெல்லியில் சந்தித்தபோது விருதுநகரில் மருத்துக்கல்லூரி தொடங்க அனுமதி வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து தமிழக அரசின் சுகாதாரத்துறை விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியது. அதன் பேரில் மத்திய அரசு இதற்கான அனுமதியை வழங்கி உள்ளது.

விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான இடம் கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட நிலத்தை பன்படுத்தும் நடவடிக்கைகளும் முடிந்துள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி ரூ.325 கோடி மதிப்பீட்டில் அமையும் என அறிவித்துள்ள மத்திய அரசு, இதில் ரூ.190 கோடியை மத்திய அரசு வழங்கும் என்றும், ரூ.135 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த மருத்துவக்கல்லூரியின் இணைப்பு ஆஸ்பத்திரியாக விருதுநகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவக்கல்லூரியில் தொடக்கத்தில் 150 பேர் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் கல்வி ஆண்டில் இந்த மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இந்தநிலையில் மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கினால் தான் வரும் கல்வி ஆண்டில் இந்த மருத்துவக்கல்லூரி செயல்பட வாய்ப்பு ஏற்படும். மேலும் தமிழக அரசு விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரியும் தொடங்கப்படும் என்று அறிவித்து அதற்காக ரூ.50 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த பல் மருத்துவக்கல்லூரியை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்தே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் நடப்பு நிதி ஆண்டிலேயே மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டினை செய்து கட்டுமான பணிகளை தொடங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் மத்திய அரசால் முன்னேற துடிக்கும் மாவட்டம் என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதுநகர் மாவட்டத்துக்கு முன்னுரிமை அளித்து நடப்பு நிதி ஆண்டிலேயே நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும் வரும் கல்வி ஆண்டில் தொடங்க உரிய நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இதன் மூலம் கல்வியில் சாதனை புரிந்து வரும் இம்மாவட்டம் உயர்கல்வியிலும் சாதனை படைக்க வாய்ப்பு ஏற்படும்.

Next Story