பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக்கொலை: தலைமறைவான வாலிபர் கோர்ட்டில் சரண்


பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக்கொலை: தலைமறைவான வாலிபர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 6 Nov 2019 11:00 PM GMT (Updated: 6 Nov 2019 10:50 PM GMT)

வண்டலூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான வாலிபர் நேற்று செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு, 

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்களம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ் (வயது 19). பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு படித்து வந்தார். வேங்கடமங்களம் பார்கவி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் விஜய் (21), இவரது சகோதரர் உதயா. இவர்கள் இருவரும் முகேசின் நெருங்கிய நண்பர்கள். நேற்று முன்தினம் மதியம் மாணவர் முகேஷ் தனது நண்பரான விஜயை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். விஜய் இருந்த அறைக்கு சென்று அவரிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அவரது சகோதரர் உதயா அறைக்கு வெளியில் இருந்துள்ளார். அப்போது திடீரென்று அறையில் இருந்து வெடி சத்தம் கேட்டது.

இதனால் பதறிப்போன உதயா உள்ளே சென்று பார்த்தபோது, முகேஷ் நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயத்துடன் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். உடனே அங்கிருந்து விஜய் தன் கையில் இருந்த துப்பாக்கியுடன் தலைமறைவானார்.

இதையடுத்து முகேஷை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த விஜய் செங்கல்பட்டு கோர்ட்டில் வந்து, நீதிபதி காயத்ரிதேவி முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார்.

இதனையடுத்து சரணடைந்த விஜயை வருகிற 20-ந்தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் போலீஸ் தரப்பில் நடைபெற உள்ள விசாரணைக்கு பிறகு தான் அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? அதற்கான உரிமம் உள்ளதா? கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எந்த வகையை சார்ந்தது? என்பன போன்ற விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story