மாவட்ட செய்திகள்

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து குறைந்தது + "||" + To Boondi Lake Krishna river water flow at least

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து குறைந்தது

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து குறைந்தது
ஆந்திர மாநில விவசாயிகளின் பயன்பாட்டிற்காகவும், காளகஸ்தி நகரின் குடிநீர் தேவைக்காகவும், கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்பட்டதால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது.
ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றும் முக்கியமான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் செப்டம்பர் 28-ந் தேதியிலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கண்டலேறு அணையிலிருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2,800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 800 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது.

கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். இந்த அணைக்கு சோமசீலா அணையிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கமாகும். சோமசீலா அணை நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ½ டி.எம்.சி. வீதம் கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதனால் கண்டலேறு அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து நேற்று காலை வரை 40 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில் நெல்லூர் மாவட்டத்தில் பருவ மழை பொய்த்து போனதால் பயிரை காப்பாற்றி கொள்ள கண்டலேறு அணையிருந்து பூண்டி எரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகின்ற கிருஷ்ணா நதி கால்வாயின் வழிநெடுகிலும் அமைந்துள்ள மதகுகளை திறக்க விவசாயிகள் ஆந்திர அரசை கேட்டு கொண்டனர். அதற்கேற்ப மதகுகள் வழியாக திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீரை ஆந்திர விவசாயிகள் தங்கள் வயலுக்கு திறந்து விட்டு பாய்ச்சி வருகின்றனர். மேலும் சிறு சிறு ஏரிகளுக்கும் கிருஷ்ணா நதி நீரை திருப்பி உள்ளனர்.

மேலும் காளகஸ்தி நகரின் குடிநீர் தேவைக்காகவும் கிருஷ்ணா நதி நீர் அனுப்பப்படுகிறது. இந்த காரணங்களால் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

நேற்றைய காலை நிலவரப்படி வினாடிக்கு 228 கனஅடி தண்ணீர் வந்து வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 29.46 அடியாக பதிவாகியது. 1,617 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு மழை நீர் வினாடிக்கு 189 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 22 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இணைப்பு (லிங்க்) கால்வாயில் புழல் மற்றும் செம்பரம்பாக்கத்துக்கு 730 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. செப்டம்பர் 28-ந் தேதியிலிருந்து நேற்று காலை வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2.187 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.