கூடலூர் அருகே, வீட்டு கதவை உடைத்து காட்டுயானை அட்டகாசம்


கூடலூர் அருகே, வீட்டு கதவை உடைத்து காட்டுயானை அட்டகாசம்
x
தினத்தந்தி 7 Nov 2019 10:00 PM GMT (Updated: 7 Nov 2019 7:34 PM GMT)

கூடலூர் அருகே வீட்டு கதவை உடைத்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. மேலும் தென்னை, வாழைகளை சேதப்படுத்தியது.

கூடலூர்,

கூடலூர் வனப்பகுதியில் காட்டுயானை, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி விவசாய தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அவ்வப்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. மேலும் விவசாய பயிர்கள், வீடுகள் சேதம் அடைகின்றன.

கூடலூர் அருகே உள்ள கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், மேல்கூடலூர், கோத்தர்வயல், தோட்டமூலா, தொரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக தோட்டமூலா பகுதியில் நள்ளிரவில் காட்டுயானை ஒன்று தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. அங்கு அந்த காட்டுயானை, கடந்த மாதம் சிக்கன் என்பவரது வீடு மற்றும் கடையை உடைத்து சேதப்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அதே காட்டுயானை தோட்டமூலா பகுதியில் புகுந்தது. பின்னர் அங்கு பயிரிடப்பட்டு இருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியது. மேலும் சுனில் என்பவரது வீட்டின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கதவை உடைத்து அட்டகாசம் செய்தது. இரவு முழுவதும் அப்பகுதியில் காட்டுயானை நின்றிருந்தது. இதை அறிந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். மேலும் இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர்.

இதைத்தொடர்ந்து நேற்று விடியற்காலையில் காட்டுயானை அங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே பொதுமக்கள் நடமாட்டம் தொடங்கியது. மேலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு கூடலூர் வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் சேதம் அடைந்த பயிர்கள் மற்றும் வீட்டு கதவை பார்வையிட் டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் காட்டுயானை ஒன்று நள்ளிரவில் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இதனால் வீடுகளுக்குள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. காட்டுயானை வீட்டை உடைத்து விடுமோ? என்ற அச்சத்தில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.விவசாய பயிர்கள் மற்றும் கட்டிடங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் ந‌‌ஷ்டத்துக்கு ஆளாகி உள்ளோம். ஆனால் அதற்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவது இல்லை. காட்டுயானை ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினரால் நிரந்தர தீர்வு காணப்படுவதும் இல்லை. இதே நிலை நீடித்தால் வனத்துறையினரை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story