இதுவரை 584 மி.மீட்டர் மழை பதிவு: மாவட்டத்தில் 13 ஏரிகள் நிரம்பின


இதுவரை 584 மி.மீட்டர் மழை பதிவு: மாவட்டத்தில் 13 ஏரிகள் நிரம்பின
x
தினத்தந்தி 8 Nov 2019 4:00 AM IST (Updated: 8 Nov 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 584 மி.மீட்டர் மழைபதிவாகி உள்ளது. இதன் காரணமாக 13 ஏரிகள் நிரம்பி உள்ளன.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லை. இதனால் கடுமையான வறட்சி நிலவி வந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 584 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. இந்த மழை காரணமாக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரிகளில் 13 ஏரிகள் நிரம்பி உள்ளன. அதன்படி மின்னக்கல், சேமூர், மாமுண்டி அக்ரஹாரம், சேருக்கலை, இலுப்புலி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி, வரகூர், வேட்டாம்பாடி, பாலமேடு சின்ன ஏரி, ஏமப்பள்ளி, இடும்பன்குளம், பருத்திபள்ளி, அக்கரைபட்டி ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. எனவே இந்த ஏரி பகுதிகளில் விவசாய பணி தீவிரம் அடைந்து உள்ளது.

தண்ணீர் வரத்து இல்லை

இதேபோல் 90 சதவீதம் மற்றும் 80 சதவீதத்திற்கு மேல் தலா ஒரு ஏரியும், 50 சதவீதத்திற்கு மேல் 4 ஏரிகளும் நிரம்பி உள்ளன. 25 சதவீதத்திற்கு மேல் 5 ஏரிகளும், 25 சதவீதம் வரை 7 ஏரிகளும் நிரம்பி உள்ளன. மீதமுள்ள 48 ஏரிகள் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடக்கின்றன. இந்த ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு இருப்பதே நீர் தேங்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். 100 ஏக்கருக்கு மேல் நீர்பரப்பு உள்ள ஏரிகளை மட்டுமே பொதுப்பணித்துறையின் சரபங்கா அதிகாரிகள் பராமரித்தும், கண்காணித்தும் வருகின்றனர். அதற்கு குறைவான பரப்பளவு உள்ள ஏரிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே பராமரித்து வருகின்றன. இதிலும் ஏராளமான ஏரிகள், குளங்கள் நிரம்பி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் பஞ்சம் ஏற்படாது

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் ஓரளவு மழை பெய்து இருப்பதால் கோடை காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story