கொங்கணாபுரத்தில் நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்


கொங்கணாபுரத்தில் நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
x
தினத்தந்தி 8 Nov 2019 4:30 AM IST (Updated: 8 Nov 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

கொங்கணாபுரத்தில் நாளை நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழா நடைபெறும் இடத்தை நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி திவாகர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

எடப்பாடி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியங்களில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

இதைத்தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (சனிக்கிழமை) கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு விவசாயிகள் உற்பத்தி விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. விழா நடைபெறும் இடத்தை மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டு தேர்வு செய்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழா உள்பட பல்வேறு விழாக்களில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சேலம் வருகிறார்.

அதிகாரி ஆய்வு

இந்த நிலையில் நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி திவாகர் கொங்கணாபுரத்துக்கு வந்து, விழா மேடை அமைக்கும் இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். மேலும் விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் தாசில்தார் கோவிந்தராஜூ, திருச்செங்கோடு விவசாயிகள் உற்பத்தி விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் ரவிகுமார், அட்மா திட்டக்குழு தலைவர் கரட்டூர் மணி, மாவட்ட முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் உள்பட பலரும் உடன் இருந்தனர்.


Next Story