புஞ்சைபுளியம்பட்டி அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு; 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது


புஞ்சைபுளியம்பட்டி அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு; 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 8 Nov 2019 4:30 AM IST (Updated: 8 Nov 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் 1,000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

அன்றையதினத்தில் இருந்து வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி வீதம் தண்ணீர் சென்று கொண்டுஇருக்கிறது. வாய்க்காலின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி ஏராளமான விவசாயிகள் நெல், வாழை, மஞ்சள், கரும்பு போன்றவற்றை பயிரிட்டு உள்ளனர்.

நெல் பயிர்கள் மூழ்கின

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த மேட்டுக்கடை சுள்ளித்தோட்டம் என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலின் இடதுபுற கரை 40 அடி நீளத்துக்கு உடைந்தது. கரை உடைந்ததால் தண்ணீர் முழுவதும் அதில் இருந்து வெளியேறி கேத்தம்பாளையம், தாசநாயக்கன்புதூர், தட்டாம்புதூர், மில்மேடு உள்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

இதன்காரணமாக அந்த பகுதியில் 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

அதுமட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள வாழைத்தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

மேலும் கேத்தம்பாளையம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருந்ததால் வீட்டில் புகுந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் அவர்கள் திணறினர்.

இதுபற்றி அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கரை உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழுவதுமாக நிறுத்தினர்.

அதுமட்டுமின்றி வெள்ளத்தால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்களும் உரிய உபகரணங்களுடன் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போக்குவரத்து துண்டிப்பு

வாய்க்கால் கரை உடைப்பின் காரணமாக சத்தியமங்கலம்- காவிலிபாளையம் ரோட்டை கடந்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. எனினும் இந்த தண்ணீர் முழுவதும் வடிய 6 மணி நேரத்துக்கும் மேல் ஆகும். எனவே இன்று(அதாவது நேற்று) நள்ளிரவுக்கு பின்னர்தான் வாய்க்கால் கரை அடைப்பை சரி செய்யும் பணி நடைபெறும்.

போர்க்கால அடிப்படையில் கரையை சரி செய்யும் பணியில் அனைத்து ஏற்பாடுகளுடன் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்,’ என்றனர்.


Next Story