6 ஆண்டுகளாக போலீசாருக்கு ‘டிமிக்கி’ கொடுத்த வாலிபர், கள்ளக்காதலியுடன் கைது
பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் கள்ளக்காதலியுடன் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை,
ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதியை சேர்ந்தவர் குட்டி. அவருடைய மகன் ராகேஷ்குமார் (வயது 9), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் குட்டி, கொட்டையூரை சேர்ந்த பெருமாள் (35) என்பவருக்கு கடனாக பணம் கொடுத்திருந்தார்.
அந்த பணத்தை திருப்பி கேட்க சென்ற போது குட்டி, பெருமாளை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் கடந்த 2013-ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற குட்டியின் மகன் ராகேஷ்குமாரை காரில் கடத்தி சென்று ஒகேனக்கல்லில் கொலை செய்து, உடலை ஆற்றில் வீசியுள்ளார். இதற்கு உடந்தையாக பெருமாளின் கள்ளக்காதலி காளியம்மாள் (36) என்பவர் இருந்துள்ளார். இதுகுறித்து ஏலகிரிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருமாளையும், காளியம்மாளையும் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த 2 பேரும் வழக்குக்கு ஆஜராகாமல் 6 ஆண்டுகளாக போலீசாருக்கு ‘டிமிக்கி’ கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில், ஏலகிரிமலை நிலாவூர் கனகநாச்சியம்மன் கோவில் அருகே பதுங்கியிருந்த பெருமாள் மற்றும் கள்ளக்காதலி காளியம்மாள் ஆகிய 2 பேரை கைது செய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story