எடப்பாடி பழனிசாமி இன்று விக்கிரவாண்டிக்கு வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டிக்கு இன்று வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றதையொட்டி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது.
கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார். இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜ் உத்தரவின்பேரில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஜெயக்குமார், கடலூர் ஸ்ரீஅபினவ் ஆகியோர் தலைமையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 30 இன்ஸ்பெக்டர்கள், 80 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,000 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், விக்கிரவாண்டிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பை பலப்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, சேதுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story