‘திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்யக்கூடாது' - மதுரையில் சரத்குமார் பேட்டி


‘திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்யக்கூடாது - மதுரையில் சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2019 4:45 AM IST (Updated: 8 Nov 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று மதுரையில் சரத்குமார் கூறினார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விலை உயர்வு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வோம் என மத்திய அரசு கூறி உள்ளது. விளைச்சல் குறைந்துள்ளதால் வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்யக்கூடாது.

ஒவ்வொரு மதத்தினரும் அவர்கள் சாயத்தை திருவள்ளுவர் மீது பூச நினைக்கிறார்கள். இது பல பிரச்சினைகள் உருவாகும். நாட்டில், மாசுக்கட்டுப்பாடு, சமுதாயம், கல்வி அதனை உயர்த்த வேண்டிய விஷயங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கிறது. இவற்றை பற்றி பேசாமல், திருவள்ளுவரை குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என நிரூபிப்பது, திருவள்ளுவர் யார் என்று கூற வேண்டிய சூழ்நிலை தற்போது இல்லை. அதை பற்றி பேசுவது நேரத்தை வீணடிப்பதாக அமையும்.

ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வணிகர்கள் பாதிக்கிறார்கள். எனவே, மத்திய அரசு சிறு வணிகர்கள் பாதிக்காத வகையில், அவர்களுடன் சேர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தை வளர்ப்பதற்கான முயற்சியை செய்ய வேண்டும். ஆன்லைன் வளர்ச்சியை தடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை மத்திய அரசு செய்யலாம்.

டிஜிட்டல் இந்தியா என்று சென்று கொண்டிருக்கும் நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தை உடனடியாக தடுக்கவும் முடியாது. தற்போது சாப்பாடு, காய்கறிகள் சினிமா டிக்கெட் என அனைத்துமே வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வாங்கி கொண்டிருக்கிறோம். அந்த ஆர்வம் அதிகமாகி விட்டது. அதை குறைக்க வேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு தேவையான இடங்களை கேட்போம். அ.தி.மு.க. ஒதுக்கி தருவார்கள் என நம்புகிறோம். நடிகர் சங்கத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. எனவே அதை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. பரவை முனியம்மாவை பார்க்க போவதற்கு நேரம் அமையவில்லை. என்னுடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது வரை அவரை சென்று பார்க்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story