பாறைகளுக்கு இடையே சிக்கிய புலி பரிதாப சாவு; பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்ததால் சோகம்
ஆற்றின் நடுவே இருந்த பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட புலி பரிதாபமாக உயிரிழந்தது.
சந்திராபூர்,
சந்திராபூர் மாவட்டத்தின் குனடா கிராமம் வழியாக சிர்னா ஆறு செல்கிறது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில், மேற்படி ஆற்றுக்கு மேலே பாலம் ஒன்று உள்ளது.
இந்த ஆற்றுப்பாலத்தில் நேற்றுமுன்தினம் மாலையில் புலி ஒன்று படுத்திருந்தது. விலங்கு ஒன்றை வேட்டையாடிவிட்டு அங்கே படுத்திருந்த அந்த புலி, சிறிது நேரத்துக்குப்பின் அந்த பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தது.
சுமார் 35 அடி உயரத்தில் இருந்து குதித்தபோது திடீரென நிலைதடுமாறிய புலி, ஆற்றின் நடுவே இருந்த பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது. அப்போது பாறையில் மோதியதால் அதன் உடலில் பலத்த காயமும் ஏற்பட்டது. குறிப்பாக அதன் முதுகெலும்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட புலியால், அதில் இருந்து வெளியேற முடியவில்லை. நீண்ட நேரமாக வெளியேற முயன்று தோற்றுப்போனது. மேலும் அதன் உடலில் ஏற்பட்டிருந்த காயத்தால் விரைவில் புலி சோர்வடைந்தது.
ஆற்றுப்பாறைகளுக்கு இடையே புலி சிக்கியிருந்த செய்தி வனத்துறையின் காதுகளுக்கு எட்டியது. உடனே அவர்கள் கூண்டு உள்ளிட்ட பொருட்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் புலியை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டனர்.
ஆனால் பாறையில் சிக்கிக்கொண்ட புலியை மீட்க அவர்களால் முடியவில்லை. இரவில் அந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்புப்பணிகள் கைவிடப்பட்டன. எனினும் இரவில் புலியின் நடவடிக்கையை கண்காணிப்பதற்கான வனத்துறை ஊழியர்கள் சிலர் அங்கே காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.
ஆனால் நேற்று காலையில், புலி அங்கேயே இறந்து கிடந்தது. இதனால் வனத்துறையினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் புலியின் உடலை மீட்டு, அங்கிருந்து எடுத்து சென்றனர். அதன் உடற்கூறு ஆய்வுக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆற்றில் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட புலி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story