பல்லடம் அருகே, காதலன் பேச மறுத்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை


பல்லடம் அருகே, காதலன் பேச மறுத்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 Nov 2019 4:30 AM IST (Updated: 8 Nov 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே காதலன் பேச மறுத்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குங்குமம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் பிருந்தா (வயது 19). இவர் பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் காதலர் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் பிருந்தாவிடம், அவருடைய காதலன் பேச மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த பிருந்தா தனது காதலனுடன் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது முடியவில்லை.

அப்போதுதான் அவர் வேறு ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் விரக்தியடைந்த பிருந்தா கடந்த 3-ந் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

தீ மளமளவென அவருடைய உடல் முழுவதும் பரவியது. இதனால் வலி தாங்க முடியாமல் பிருந்தா அலறி சத்தம் போட்டார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவருடைய உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பிருந்தா போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

நானும், குங்குமம் பாளையத்தை சேர்ந்த சந்தோசும் உயிருக்கு உயிராக காதலித்தோம். ஆனால் சிறிது நாட்களாக அவர் என்னிடம் பேசுவதை குறைத்துக்கொண்டார்.

அதன்பின்னர் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். காதலித்து ஏமாற்றியதால் விரக்தியடைந்த நான் தீக்குளித்தேன்.

இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பிருந்தா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் பிருந்தாவின் காதலன் சந்தோஷ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story