மாவட்ட செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர் + "||" + Kotanatu murder, robbery case, Shayan and 10 others including Manoj Azar in Ooty Court

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக ‌‌ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர். அடுத்த மாதம் 2-ந் தேதி சாட்சிகளிடம் விசாரணை தொடங்குகிறது.
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகா‌‌ஷ் கொலை செய்யப்பட்டார். எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ‌‌ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோ‌‌ஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ‌‌ஷயான், மனோஜ் ஆகிய 2 பேரும் கோவை மத்திய சிறையில் உள்ளனர். இதற்கிடையே ‌‌ஷயான் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருந்து ‌‌ஷயான், மனோஜ் ஆகியோரை போலீசார் அழைத்து வந்து, ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மேலும் மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோ‌‌ஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 8 பேர் ஆஜரானார்கள். அவர்களது தரப்பு வக்கீல் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்வதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அப்போது அரசு வக்கீல் நந்தகுமார் எழுந்து, ‘ஒவ்வொரு முறையும் மனுத்தாக்கல் செய்வதாக கூறியும் இதுவரை மனுத்தாக்கல் செய்யப்படவில்லை, எனவே சாட்சி களிடம் விசாரணையை உடனே தொடங்க வேண்டும்‘ என்று கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து நீதிபதி வடமலை கூறும்போது, முதல் சாட்சியான காவலாளி கிரு‌‌ஷ்ணதாபா மற்றும் பிற சாட்சிகளை அடுத்த மாதம்(டிசம்பர்) 2-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். 2-ந் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடைபெறும். மேலும் வழக்கில் தொடர்புடைய அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றார்.

இதையடுத்து ‌‌ஷயான், மனோஜ் ஆகியோர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 103 பேர் சாட்சிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.