மத்திய அரசை கண்டித்து நூதன போராட்டம்: பாய், தலையணைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் காங்கிரசார் நுழைய முயற்சி
மத்திய அரசை கண்டித்து பாய், தலையணைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற காங்கிரசார் 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான பொருளாதார கொள்கையால் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறியும், மத்திய அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
பொருளாதார மந்த நிலையினால் மக்கள் ஊரை காலி செய்து, வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்லும் தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பாய், தலையணை, பாத்திரம், டிரெங்க் பெட்டி போன்ற பொருட்களை தலையில் சுமந்தபடி காங்கிரசார் சிலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் ஆடு, மாடுகளையும், கோழிகளையும் அழைத்து வந்திருந்தனர்.
பின்னர் பாய், தலையணைகளுடன் காங்கிரசார் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த நூதன போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆனந்த் காரல் மார்க்ஸ், ராபர்ட் ஜோன், டைசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆடு, மாடு, கோழிகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது பெண் நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் 31 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 38 பேரை கைது செய்து நாகர்கோவில் ராமன்புதூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story