சேலத்தில் பரபரப்பு பட்டறையில் ஏர் கம்ப்ரசர் சிலிண்டர் வெடித்து 5 பேர் படுகாயம்


சேலத்தில் பரபரப்பு பட்டறையில் ஏர் கம்ப்ரசர் சிலிண்டர் வெடித்து 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Nov 2019 10:30 PM GMT (Updated: 8 Nov 2019 8:49 PM GMT)

சேலத்தில் பட்டறையில் ஏர் கம்ப்ரசர் சிலிண்டர் வெடித்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த மாணவனின் கை துண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூரமங்கலம், 

சேலம் கந்தம்பட்டி மேம்பாலம் நகரை சேர்ந்தவர் சுரே‌‌ஷ்(வயது 37). இவர் கந்தம்பட்டி பைபாஸ் ரோட்டில் பெயிண்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இங்கு வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டப்படும். நேற்று காலை ஈரோட்டை சேர்ந்த தன்ராஜ் என்பவர் தனது லாரிக்கு பஞ்சர் ஒட்டுவதற்கு அந்த பட்டறைக்கு வந்தார். அப்போது பட்டறையில் வேலை பார்க்கும் நெத்திமேடு பகுதியை சேர்ந்த வி‌‌ஷ்ணுகுமார்(வயது 29), மல்லூரை சேர்ந்த மூர்த்தி(40) ஆகியோர் லாரி டயருக்கு பஞ்சர் ஒட்டினர்.

பஞ்சர் ஒட்டிய பிறகு டயருக்கு ஏர் கம்ப்ரசர் சிலிண்டர் மூலம் வி‌‌ஷ்ணுகுமார் ஏர் பிடித்தார். அப்போது திடீரென அந்த ஏர் கம்ப்ரசர் சிலிண்டர் ‘டமார்’ என்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வி‌‌ஷ்ணுகுமார், மூர்த்தி, தன்ராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும் ஏர் டேங்கின் சுமார் 25 கிலோ எடை உள்ள மூடி 100 அடி தூரத்தில் இருந்த ராமன் என்பவரது ஓட்டு வீட்டுக்குள் விழுந்தது.

இந்த நேரத்தில் வீட்டுக்குள் ராமனின் மகன்களான 5-ம் வகுப்பு படித்து வரும் மவுலீஸ்வரன்(11), ஒன்றாம் வகுப்பு படித்து வரும் லித்திக்(6) ஆகியோர் பள்ளிக்கூடம் செல்வதற்காக புறப்பட்டு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது ஓட்டை உடைத்துக்கொண்டு ஏர் கம்ப்ரசர் சிலிண்டரின் மூடி வீட்டுக்குள் விழுந்தது. இந்த மூடி மவுலீஸ்வரன், லித்திக் ஆகியோர் மீது விழுந்து அமுக்கியது.

மகன்களின் அலறல் சத்தத்தை கேட்டு வெளியில் நின்று கொண்டிருந்த ராமன் வீட்டுக்குள் ஓடி வந்தார். பின்னர் அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மகன்களை பார்த்து கதறி அழுதார். இதைகேட்டு அருகில் வசித்து வந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் மாணவர்களை மீட்டனர். இதில் மவுலீஸ்வரனின் வலது மணிக்கட்டு துண்டானது. அவனுக்கு மேலும் சில இடங்களில் காயம் ஏற்பட்டது. இதேபோல் லித்திக்கிற்கும் வலது கை உள்பட சில இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மவுலீஸ்வரனின் கையை இணைக்கும் முயற்சியாக அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் ஏர் கம்ப்ரசர் சிலிண்டர் வெடித்ததில் வி‌‌ஷ்ணுகுமார், தன்ராஜ், மூர்த்தி ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். அவர்களும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஏர் கம்ப்ரசர் சிலிண்டர் பழுதடைந்த காரணத்தால் வெடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘திடீரென குண்டு வெடிப்பது போல் பயங்கர சத்தம் கேட்டதால் வீட்டுக்குள் இருந்த நாங்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்தோம். அப்போது தான் சிறுவர்கள் மீது ஏர் கம்ப்ரசர் சிலிண்டர் மூடி விழுந்து அமுக்கியது தெரியவந்தது’ என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story