தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலர் கைது
ஸ்ரீவைகுண்டத்தில் தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் அப்பகுதியில் உள்ள தனது நிலத்தில் கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை அமைப்பதற்கு ஏற்பாடு செய்தார். இதற்காக அவர், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால், நீண்ட நாட்களாகியும் சுந்தருக்கு கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு சென்று கேட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ரோலன் (வயது 52), தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டுமானால், ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தர், இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து லஞ்சம் கேட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ரோலனை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி, சுந்தரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை போலீசார் கொடுத்து, அவற்றை ரோலனிடம் வழங்கும்படி கூறினர்.
இதையடுத்து சுந்தர் நேற்று மாலையில் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு சென்று, ரோலனிடம் ரூ.5 ஆயிரத்தை வழங்கினார். அதை ரோலன் வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story