இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தென்காசி தாலுகா அலுவலகத்தை விவசாய தொழிலாளர்கள் முற்றுகை
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தென்காசி தாலுகா அலுவலகத்தை நேற்று விவசாய தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
தென்காசி,
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தென்காசி தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாலுசாமி, மாவட்ட குழு உறுப்பினர் கணபதி, தாலுகா செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் வேலுமயில், மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ், சி.ஐ.டி.யு. தாலுகா தலைவர் வன்னிய பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் தம்பிதுரை, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க தாலுகா செயலாளர் ஆயிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தாசில்தார் சண்முகத்திடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில், மடத்தரப்பாறை, பகவதிபுரம், தெற்குமேடு, ஆர்.சி.தெரு, கட்டளை குடியிருப்பு, ராஜீவ்நகர், செங்கோட்டை மேலூர் கதிரவன் காலனி போன்ற பகுதிகளில் சொந்த வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மடத்தரப்பாறை, பகவதிபுரம், தெற்குமேடு, ஆர்.சி.தெரு பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாடு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூறப்பட்டு இருந்தது. பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story