என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் விபத்து: கன்வேயர் பெல்ட்டில் வாகனம் மோதல்; 17 பேர் காயம்
என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் வாகனம் மோதிய விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.
மந்தாரக்குப்பம்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்குள்ள சுரங்கம் மற்றும் அனல் மின்நிலையத்தில் ஏராளமான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.
அதன்படி மந்தாரக்குப்பத்தில் அமைந்துள்ள 2-வது சுரங்கத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களை நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம்(பிக்-அப்) மூலம் நுழைவு வாயிலில் இருந்து ஏற்றி, நிலக்கரி வெட்டும் இடத்துக்கு அழைத்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை 6 மணியளவில் 2-வது சுரங்க நுழைவு வாயிலில் இருந்து 17 தொழிலாளர்கள் வாகனத்தில் ஏறி நிலக்கரி வெட்டும் இடத்துக்கு சென்று கொண்டு இருந்தனர்.
நிலக்கரி வெட்டும் இடம் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் மோதியது. இதில் வாகனத்தில் பயணித்த தொழிலாளர்கள் விவேகானந்தா, கல்யாணசுந்தரம், ஜஸ்டின் சாமுவேல், மகாலிங்கம், ராமலிங்கம், பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி உள்பட 17 பேர் காயமடைந்தனர். இவர்களை அருகில் இருந்த தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story