மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு, லாரியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது + "||" + From Tamil Nadu to Kerala, 11 tonnes of rice seized from lorry - 2 arrested

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு, லாரியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு, லாரியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-  2 பேர் கைது
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்,  

தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லை பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வருவாய்த்துறையினரும், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்தபோதிலும் ரேஷன் அரிசி கேரள மாநிலத்துக்கு கடத்தி செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு உத்தமபாளையம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி லாரியில் கடத்தப்படுவதாக லோயர்கேம்ப் சோதனைச்சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சோதனைச்சாவடி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அந்த லாரியில் 50 கிலோ எடை கொண்ட 220 மூட்டை ரேஷன் அரிசி (11 டன்) இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக லாரி டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் லாரி டிரைவர் கேரள மாநிலம் கம்பம்மெட்டு மூங்கில்பள்ளம் பகுதியை சேர்ந்த பினிஷ் (வயது 35), மற்றொருவர் லாரி உரிமையாளர் ராமக்கல்மெட்டு பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (30) என்பதும், உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து சோதனைச்சாவடி போலீசார் 2 பேரையும், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியையும் உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியையும், லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை