மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்-மந்திரி பட்னாவிஸ் ராஜினாமா; ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா?


மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்-மந்திரி பட்னாவிஸ் ராஜினாமா; ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா?
x
தினத்தந்தி 9 Nov 2019 6:02 AM IST (Updated: 9 Nov 2019 6:02 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் அதிரடி அரசியல் திருப்பமாக முதல்-மந்திரி பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். அடுத்து ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை, நவ.9-

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது பாரதீய ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.

மற்றொரு கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 44 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றியது. பிற கட்சிகள் 16 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தனர்.

ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், அதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்தது. இதனை ஏற்க பாரதீய ஜனதா விடாப்பிடியாக மறுத்து விட்டது.

இதற்கு மத்தியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி செய்தது. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார். பின்னர் சரத்பவார் சோனியா காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து நடந்த திருப்பமாக, தங்களது ஆதரவு வேண்டுமானால் பாரதீய ஜனதா மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முதலில் சிவசேனா வெளியேற வேண்டும். சிவசேனாவை சேர்ந்த மத்திய மந்திரி அரவிந்த் சாவந்த் பதவி விலக வேண்டும் என்று சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்தது. இது சிவசேனாவுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.

இதனால் ஆட்சியமைக்க பாரதீய ஜனதாவுடன் சிவசேனா கைகோர்ப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் சிவசேனாவும், பாரதீய ஜனதாவும் தங்களது நிலைப்பாட்டில் இறுதிவரை பிடிவாதமாக இருந்து விட்டன. இரு கட்சிகளும் ஒரு தடவை கூட அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை நடத்தவில்லை.

முதல்-மந்திரி பதவியை பங்கிட்டு தர ஒப்புக்கொண்டால் மட்டும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்றும் திட்டவட்டமாக கூறி விட்டார். மேலும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனால் தேர்தல் முடிவு வெளியாகி நேற்றுடன் 16 நாட்கள் முடிந்தும் ஆட்சி அமைக்க வழிபிறக்கவில்லை. சட்டசபையின் ஆயுள் காலம் இன்று (சனிக்கிழமை) முடிவடைவதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் புதிய திருப்பமாக நேற்று மாலை 4 மணிக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

அப்போது மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்-மந்திரி பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை கவர்னர் கேட்டுக்கொண்டார். இதனால் கவர்னர் அடுத்த முடிவு எடுக்கும் வரை தேவேந்திர பட்னாவிஸ் காபந்து முதல்-மந்திரியாக செயல்படுவார்.

இனி மராட்டியத்தில் பாரதீய ஜனதா அல்லாத மாற்று அரசு அமையுமா? அல்லது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே பதவியை ராஜினாமா செய்த உடன் தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக் கொண்டார். 5 ஆண்டுகள் சேவையாற்ற வாய்ப்பு அளித்த மராட்டிய மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக எனது முன்னிலையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதை அமித்ஷாவும், நிதின் கட்காரியும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஆட்சி அமைப்பதில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நான் பலமுறை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு போன் செய்தேன். ஆனால் அவர் எனது அழைப்புகளை ஏற்கவில்லை. இந்த பிரச்சினையில் பாரதீய ஜனதாவுடன் பேசாமல், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் பேசும் சிவசேனாவின் கொள்கை தவறானது.

முதல்-மந்திரி பதவியை பெறும் விஷயத்தில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பாரதீய ஜனதாவை சரமாரியாக தாக்கி பேசினார். அதற்கு எங்களால் பதிலடி கொடுத்து இருக்க முடியும். ஆனால் உத்தவ் தாக்கரே மீது நாங்கள் அதிக மதிப்பு வைத்து இருப்பதால் விமர்சனம் செய்யவில்லை.

கவர்னர் மாற்று ஏற்பாடாக என்ன செய்வார் என்று நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். மாற்று ஏற்பாடு என்பது புதிய அரசு அமையலாம் அல்லது ஜனாதிபதி ஆட்சி அமலாகலாம்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

பாரதீய ஜனதாவை சேர்ந்த 49 வயது தேவேந்திர பட்னாவிஸ், முதல்-மந்திரி பதவி வகித்தபோது சிவசேனாவுடன் அவ்வப்போது ஏற்பட்ட மோதலை சமாளித்து 5 ஆண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story