காஞ்சி பாலசுப்பிரமணியர் கோவிலில் திருட்டு


காஞ்சி பாலசுப்பிரமணியர் கோவிலில் திருட்டு
x
தினத்தந்தி 9 Nov 2019 10:30 PM GMT (Updated: 9 Nov 2019 4:47 PM GMT)

காஞ்சி பாலசுப்பிரமணியர் கோவிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கலசபாக்கம், 

கலசபாக்கத்தை அடுத்த காஞ்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம நபர்கள் கோவிலின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து கண்காணிப்பு கேமராவை பிளாஸ்டிக் கவரால் மூடி மறைத்து உள்ளதும், உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

திருட்டு போன காணிக்கை பணம் எவ்வளவு என்று போலீசாரோ, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளோ தெரிவிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கோவிலில் 4-வது முறையாக திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, போலீசார் இரவு நேரத்தில் கோவில் பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story