தமிழகம் முழுவதும் 4,500 மருத்துவ பணியாளர்கள் நியமனம் தஞ்சையில், அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


தமிழகம் முழுவதும் 4,500 மருத்துவ பணியாளர்கள் நியமனம் தஞ்சையில், அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 5:41 PM GMT)

தமிழகம் முழுவதும் 4,500 மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என தஞ்சையில், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீனமயமாக்கப்பட்ட விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, முடநீக்கியல் நவீன அறுவை சிகிச்சை அரங்கு, அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், பன்னோக்கு உயர் சிறப்பு தீவிர சிகிச்சைப்பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி., சி.வி.சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் வரவேற்றார். அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நவீன சிகிச்சை பிரிவுகளை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரலாற்றில் இன்றைய தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாகும். இதுவரை இல்லாத அளவுக்கு சர்வதேச தரத்துடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் நவீன உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

உயர்தர சிகிச்சை

இனி தஞ்சை மட்டுமின்றி தஞ்சையை சுற்றி உள்ள அனைத்து மாவட்ட மக்களும் சிகிச்சை பெற்று பயன்பெறலாம். மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும். ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. இனிமேல் முழுமையாக ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்படும். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்து காய சிகிச்சை பிரிவு நவீனமயமாக்கப்பட்டுள்ளது. விபத்து மற்றும் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் வருபவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படும். தாய் வார்டு மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளோம். இடுப்பு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்படுகிறது. அதற்காக நவீன கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. உயர் தர சிகிச்சைகள் அளிக்கப்படும் மருத்துவமனையாக திகழ்கிறது.

நல்ல செய்தி

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும். அனைத்து அறுவை சிகிச்சைகளும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டு வருகிறது. அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் கனிவுடன் பரிசீலிப்பார் என உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் அரசு அளித்த உறுதியின்படி அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்.

எம்.ஆர்.பி. செவிலியர்கள் 9,533 பேரை முதன்முறையாக அ.தி.மு.க. அரசு தான் பணி நியமனம் செய்தது. ஊதிய உயர்வு கேட்டார்கள். அவர்களுக்கு 2 மடங்கு சம்பள உயர்வு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களை பணி நிரந்தரம் செய்து வருகிறோம். இந்த மாதத்துக்குள்(நவம்பர்) 2,345 செவிலியர்கள், 1,234 கிராம செவிலியர்கள், 90 பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் கூடுதல் டாக்டர்கள் என 4,500 பேர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் வழங்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

வைத்திலிங்கம் எம்.பி.

வைத்திலிங்கம் எம்.பி. கூறும்போது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தஞ்சையில் பல்நோக்கு மருத்துவமனையை கட்டினார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இன்றைக்கு இருதய அறுவை சிகிச்சை பிரிவு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் சீரிய முயற்சியால் சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எல்லா வகை சிகிச்சை பிரிவுகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவுகளும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவது தமிழகஅரசின் அம்சமாகும் என்றார்.

விழிப்புணர்வு முகாம்

முன்னதாக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு விழிப்புணர்வு முகாமை அமைச்சர்கள் பார்வையிட்டனர். அப்போது மருத்துவ பணியாளர் ஒருவர் கொசு போன்று வேடம் அணிந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தது அனைவரையும் கவர்ந்தது.

விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் பாரதி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் காந்தி, மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சரவணன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story