‘அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்கிறோம்’ - தேனியில் தா.பாண்டியன் பேட்டி


‘அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்கிறோம்’ - தேனியில் தா.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2019 10:45 PM GMT (Updated: 9 Nov 2019 6:34 PM GMT)

அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்பதாகவும், மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தேனியில் தா.பாண்டியன் தெரிவித்தார்.

தேனி, 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வில் 5 நீதிபதிகள் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு கூறி இருக்கிறார்கள். இந்த தீர்ப்பை ஏற்கிறோம். இனி மதத்தின் பெயரால், தெய்வத்தின் பெயரால் இந்தியாவில் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக்கூடாது. சகோதரர்களிடையே கலவரத்தை தூண்டக்கூடாது. அதற்கு முதல் படியாக இந்த தீர்ப்பை பயன்படுத்த வேண்டும்.

கலவரத்துக்கு யாரும் வித்திடக்கூடாது. அவர்களை மத்திய அரசும், மாநில அரசும் கவனிக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறுகிறோம். மீண்டும் கலவரத்துக்கு இதை ஒரு யுக்தியாக பயன்படுத்தக்கூடாது. இந்த தீர்ப்பை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வர வேண்டும். மக்களிடம் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். வெறுப்பை அகற்ற வேண்டும்.

இதேபோல், இந்தியாவில் மனுதர்ம முறையில் சாதிய ஏற்றத்தாழ்வு உள்ளது. அவைகளும் இனிமேல் இந்தியாவில் இல்லை என்று மதத்தலைவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் பேச வேண்டும். எல்லா கட்சியினரும் இதை ஏற்று வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மோடி கடைபிடித்த தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் போன்ற மேதைகளை எல்லாம் மோடி பயன்படுத்தவில்லை. தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் 2 லட்சத்து 96 ஆயிரம் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. கருப்பு பண புழக்கத்தால் தங்கம் விலை தான் உயர்ந்துள்ளது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் சிறந்த நடிகர்கள். நடிப்பு கலையில் உச்சம் தொட்டவர் கமல். ரஜினிக்கு ஜப்பானில் கூட அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்று நினைப்பதும், அதுபோன்ற கருத்தை மக்களிடம் திணிப்பதும் தவறானது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story