அயோத்தி வழக்கில் தீர்ப்பு: மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


அயோத்தி வழக்கில் தீர்ப்பு: மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 7:38 PM GMT)

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை,

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர்கோவில், பாபர் மசூதி தொடர்புடைய சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான தீர்ப்பு நேற்று காலையில் வெளியானது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

குறிப்பாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், பொது அலுவலக வளாகம், கலெக்டர் அலுவலகம், கோவில்கள் மற்றும் பள்ளி வாசல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அன்னவாசல்

இதேபோல இலுப்பூர், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், பெருமநாடு, குடுமியான்மலை, வயலோகம், சித்தன்னவாசல், வீரப்பட்டி உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்கள், கோவில்கள், பஸ் நிலையங்கள், கடைவீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி பள்ளிவாசலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிவாசல் பின்புற பக்கத்தில் இருந்து திடீரென பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், வீட்டில் உள்ள தோட்டத்தை குரங்கு நாசம் செய்வதால், அதை விரட்டுவதற்காக பட்டாசு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் முக்கண்ணாமலைப்பட்டியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அறந்தாங்கி-கறம்பக்குடி

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, கீரனூர், விராலிமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்கள், கோவில்கள் மற்றும் பள்ளி வாசல்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story