புதுச்சேரியில் கோவில்கள், மசூதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு


புதுச்சேரியில் கோவில்கள், மசூதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 10 Nov 2019 4:30 AM IST (Updated: 10 Nov 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து புதுச்சேரியில் நேற்று கோவில்கள், மசூதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புதுச்சேரி,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

அதைத்தொடர்ந்து பிரச்சினைகள் ஏதும் ஏற்படலாம் என்று கருதி நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு முதலே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதிகாலை முதலே...

பஸ்நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டன. நேற்று காலை 10-30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதையொட்டி நேற்று அதிகாலை முதலே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என அனைவரும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

புதிய பஸ்நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி கலவரம் ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தும் வகையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனமும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கோவில்கள், மசூதிகளுக்கு பாதுகாப்பு

மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜபெருமாள் கோவில் மற்றும் மசூதிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் காலை 10-30 மணிக்கு தீர்ப்பு வெளியான நிலையில் பிரச்சினைகள் ஏதும் ஏற்படவில்லை. புதுச்சேரி வழக்கம்போல் அமைதியாகவே இருந்தது. புதுவை வந்திருந்த சுற்றுலா பயணிகளும் தடையின்றி விருப்பப்பட்ட இடங்களுக்கு சென்று வந்தனர். ஆனாலும் இந்த தீர்ப்பு எதிரொலியாக புதுவையில் வழக்கத்தைவிட சற்று குறைவான அளவிலேயே சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் இருந்தது.


Next Story