மராட்டியத்தில் பா.ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியுமா? பதில் அளிக்குமாறு கவர்னர் கடிதம்
மராட்டியத்தில் பாரதீய ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது குறித்து பதிலளிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் கடிதம் அனுப்பினார்.
மும்பை,
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு தேர்தல் முடிவு வெளியாகி நேற்றுடன் 17 நாட்கள் ஆன போதிலும், புதிய அரசு அமையவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்காமல் மோதல் போக்கை கடைப்பிடித்தன. முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டுகள் தங்களுக்கு பகிர்ந்து தர வேண்டும் என்று சிவசேனா பிடிவாதமாக இருந்தது. இதற்கு பாரதீய ஜனதா உடன்பட மறுத்து விட்டது.
இந்த மோதல் காரணமாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். மாற்று ஏற்பாடு செய்யும் வரை காபந்து முதல்-மந்திரியாக செயல்படுமாறு அவரை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் தற்போதைய 13-வது மராட்டிய சட்டசபையின் ஆயுள் காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் நேற்று வரை எந்த கட்சியும் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரவில்லை.
இந்த பரபரப்பான நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் காலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். மாலையில் அரசின் அட்வகேட் ஜெனரல் ஆசுதோஸ் கும்பகோணியை கவர்னர் ராஜ்பவனுக்கு அழைத்தார். குழப்பமான சூழலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அட்வகேட் ஜெனரலுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். இதனால் கவர்னர் அடுத்து என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக நேற்று இரவு தனிப்பெரும் கட்சியான பாரதீய ஜனதாவிடம் ஆட்சி அமைக்க முடியுமா? என்று கேட்டு கவர்னர் கடிதம் அனுப்பினார். அந்த கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதால், அவருக்கு கவர்னரின் கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த கடிதத்தில், ஆட்சியமைக்க உங்களுக்கு விருப்பம் உள்ளதா?, உங்களால் ஆட்சி அமைக்க முடியுமா? என்று பதிலளிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை கவர்னர் கேட்டுக்கொண்டதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சில சுயேச்சைகள் ஆதரவும் தெரிவித்து உள்ளனர். ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க 145 இடங்கள் தேவை என்பதால், அந்த கட்சிக்கு போதுமான பலம் இல்லை.
எனவே கவர்னரின் அழைப்பை ஏற்று பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க முன் வருமா? அல்லது பின்வாங்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சி தலைவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்கிறார்கள்.
ஒரு வேளை பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க முன்வராத பட்சத்தில், 56 இடங்களில் வெற்றி பெற்ற 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுப்பார் என்று கூறப்படுகிறது. சிவசேனா தனக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளோடு சேர்த்து 170-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பாரதீய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கருதுவதால் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நேற்று 3-வது நாளாக மும்பை ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
கவர்னர் முடிவுக்கு சிவசேனா வரவேற்பு
காங்கிரஸ், தேசியவாத காங். கட்சிகளும் கருத்து
மராட்டியத்தில் ஆட்சி அமைக்க முடியுமா? என்று கேள்வி கேட்டு பாரதீய ஜனதாவுக்கு நேற்று கவர்னர் கடிதம் அனுப்பினார்.
இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், “குறைந்தபட்சம் இப்போதாவது புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கையை கவர்னர் ஆரம்பித்துள்ளார். முறைப்படி அதிக தொகுதிகளை வென்றுள்ள தனிப்பெரும் கட்சியான பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். இ்ந்த முடிவை சிவசேனா வரவேற்கிறது” என்றார்.
இதேபோல் தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:- கவர்னர் தாமதமாக பணியை தொடங்கி இருக்கிறார். முன்பே இந்த நடவடிக்கையை அவர் எடுத்திருக்க வேண்டும். பாரதீய ஜனதா சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் தேசியவாத காங்கிரஸ் அவர்களுக்கு எதிராக வாக்களிக்கும். ஒருவேளை சிவசேனாவும் அவர்களுக்கு எதிராக வாக்களித்து ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டால் மாற்று வழி குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி சிந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், “நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் இந்த நடைமுறை தொடங்கியுள்ளது. கவர்னர் முன்பே இதை செய்திருக்க வேண்டும். ஏற்கனவே காலம் கடந்துவிட்டது” என்றார்.
Related Tags :
Next Story