அயோத்தி தீர்ப்பு எதிரொலி, கோவையில் 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு
அயோத்தி தீ்ர்ப்பையொட்டி கோவையில் நேற்று 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோவை,
அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதை தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கோவையில் நேற்று முன்தினம் தமிழக கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் 2,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் அதிரடி படை, மத்திய அதிவிரைவு படையினர் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி ஆகிய பஸ் நிலையங்கள் மற்றும் கோவை ரெயில் நிலையத்திலும் அதிவிரைவு படையினர், அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்படை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனங்களில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
டவுன்ஹால், உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நடந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். மாநகர் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல கோவை புறநகர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, காரமடை, துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் உச்சக்கட்ட பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவை நகருக்கு வரும் வாகனங்களை சோதனை செய்த பின்னரே நகருக்குள் அனுமதித்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு முழுவதும் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று தொடர்ந்து 2-வது நாளாக போலீசார் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் 2-வது நாளான நேற்று போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இருந்தாலும் கோவில்கள் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தி 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story