கோவிலில் திருமணம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பூட்டு போட்டதால் பரபரப்பு அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் குவிப்பு


கோவிலில் திருமணம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பூட்டு போட்டதால் பரபரப்பு அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 11 Nov 2019 4:30 AM IST (Updated: 11 Nov 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே கோவிலில் திருமணம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பூட்டு போடப்பட்டதால் அப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திருமணம் உள்ளிட்ட வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அதன்படி நேற்று காலை அந்த கோவிலில் நமங்குணம் கிராமத்தை சேர்ந்த அருண் ஸ்டாலின், திவ்யா ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் சிலர் அந்த கோவிலின் நுழைவு வாயில் கேட்டில் 10-க்கும் மேற்பட்ட பூட்டுகளை போட்டு பூட்டி வைத்திருந்தனர். இதனால் திருமணத்திற்கு வந்த மற்றொரு சமூகத்தினர் கோவிலில் பூட்டு போடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை தாசில்தார் தேன்மொழி மற்றும் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி கோவிலில் இருந்த பூட்டுகளை திறந்து விட்டனர். அதை தொடர்ந்து அங்கு வழக்கம்போல திருமணம் நடைபெற்றது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story