சட்டமன்ற தேர்தலுக்கு முன் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவார் கராத்தே தியாகராஜன் பேட்டி


சட்டமன்ற தேர்தலுக்கு முன் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவார் கராத்தே தியாகராஜன் பேட்டி
x
தினத்தந்தி 10 Nov 2019 11:00 PM GMT (Updated: 10 Nov 2019 7:29 PM GMT)

சட்டமன்ற தேர்தலுக்கு முன் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவார் என்று கராத்தே தியாகராஜன் கூறினார்.

திருச்சி,

திருச்சியில் நேற்று அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய இந்திய கராத்தே சங்க இயக்குனர் கராத்தே தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் முதன் முறையாக கராத்தே சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் ஆசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்ற கராத்தே வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்தியாவை பொறுத்தவரை நமது வீரர்கள் தற்போது ஆசிய அளவில் 10-வது இடத்திலும், உலக அளவில் 40-வது இடத்திலும் உள்ளனர்.

எனவே இந்த போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க வாய்ப்பு இல்லை. குத்துச்சண்டை, ஆக்கி, வில்வித்தை போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்தியாவில் கராத்தே போட்டியை பிரபலப்படுத்த இன்னும் அதிகளவில் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவேன், 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று 2 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்து விட்டார். அதன்படி அவர் சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக புதிய கட்சியை தொடங்குவார். ஆந்திராவில் என்.டி.ராமராவ் புதிய கட்சி தொடங்கி 6 மாதங்களில் ஆட்சியை பிடித்தது போல், ரஜினிகாந்த் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பார். அவர் முதல்-அமைச்சராகி கோட்டையில் கொடி ஏற்றுவார்.

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆட்சியில் இருந்த போதே தனது ஆளுமையை நிரூபித்தவர் ரஜினிகாந்த். அவர் கூறியபடி தமிழகத்தில் சிறந்த ஆளுமை இல்லாத வெற்றிடம் 200 சதவீதம் உள்ளது. அந்த வெற்றிடத்தை அவரால் தான் நிரப்ப முடியும். துரைமுருகன் கூறியபடி மு.க.ஸ்டாலினால் நிரப்ப முடியாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முதல்-அமைச்சர் என்பதை நிரூபித்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரட்டை தலைமை இருப்பதால் அவர்களால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story