கர்நாடக வனப்பகுதியில் இருந்து 130 யானைகள் தேன்கனிக்கோட்டை காட்டுக்கு வந்தன விவசாயிகள் கவலை


கர்நாடக வனப்பகுதியில் இருந்து 130 யானைகள் தேன்கனிக்கோட்டை காட்டுக்கு வந்தன விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 11 Nov 2019 4:30 AM IST (Updated: 11 Nov 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக வனப்பகுதியில் இருந்து 130 யானைகள் தேன்கனிக்கோட்டை காட்டுக்கு வந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. தேன்கனிக்கோட்டை வனப்பகுதி அருகில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி பயிரை குறி வைத்து இந்த யானைகள் ஆண்டுதோறும் வருகின்றன. சுமார் 4 மாதங்கள் இந்த யானைகள் இப்பகுதியில் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று 130 காட்டு யானைகள் கர்நாடக வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காட்டிற்கு வந்தன.

வனத்துறையினர் கண்காணிப்பு

தேன்கனிக்கோட்டை வனப்பகுதி அருகே உள்ள தேவர்பெட்டா காடு வழியாக இந்த யானைகள் வந்துள்ளன. இதில் தளி வனப்பகுதியில் 60 யானைகளும், ஜவளகிரி காட்டையொட்டி 70 யானைகளும் என மொத்தம் 130 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் எந்த நேரமும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். யானைகளை கண்காணிக்க மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவின் பேரில் தளி வனச்சரகர் நாகராஜ், வனவர்கள், வேட்டை தடுப்பு அலுவலர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

தண்ணீரை அடித்து விளையாடியது

இதற்கிடையே தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்துள்ள யானைகள் அந்த பகுதியில் உள்ள ஒரு ஏரியில் நேற்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தன. யானைகள் துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி ஒன்றன் மீது மற்றொன்று அடித்து விளையாடியது.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் பார்த்து ரசித்தனர். மேலும் அவர்கள் தங்களின் செல்போனில் படம் எடுத்தனர். தற்போது தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் தீவிரமாக யானைகளை கண்காணித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் விவசாயிகள் யாரும் வனப்பகுதி அருகிலும், விவசாய நிலங்களில் காவல் காக்க வேண்டாம் எனவும், வனப்பகுதியில் விறகு பொறுக்கவோ, ஆடு, மாடுகளை மேய்க்கவோ செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story