தூத்துக்குடியில் வீட்டில் உடல் கருகிய நிலையில் கிடந்த இளம்பெண் - கொலையா? போலீசார் விசாரணை
தூத்துக்குடியில் வீட்டில் உடல் கருகிய நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி விவேகானந்தா நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஒரு தம்பதி வாடகைக்கு குடியேறினர். நேற்று மதியம் வரை அந்த வீடு திறக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து உடல் எரிந்த துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தினர் தாளமுத்துநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உள்பக்கமாக பூட்டிக்கிடந்த அந்த வீட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு ஒரு இளம்பெண் உடல் தீயில் கருகிய நிலையில் கிடந்தது. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் நேற்று முன்தினம் இரவே இறந்து இருந்ததாலும், உடல் தீயில் கருகி இருந்ததாலும் துர்நாற்றம் வீசி உள்ளது.
இதையடுத்து போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கவிதா (வயது 30) என்பது தெரியவந்தது.
கவிதா கடந்த 3 ஆண்டுகளாக தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தூத்துக்குடி மாதாநகர் அருகே வசித்து வந்தார். அங்கிருந்து நேற்று முன்தினம் கவிதா, புதிய வீட்டுக்கு வந்து உள்ளார். அந்த வீட்டின் கதவு எளிதில் கழற்றி மாட்டும் வகையில் இருந்தது.
இதையறிந்த கவிதாவுக்கு தெரிந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது கவிதாவுக்கு தொடர்ந்து செல்போன் அழைப்பு வந்து உள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கவிதாவை கொலை செய்து விட்டு உடலை தீவைத்து எரித்து இருக்கலாம்? என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும் கவிதா வீடு மாற்றுவதற்கு லோடு ஆட்டோ டிரைவர் ஜோதிபாசு நகரை சேர்ந்த பரமசிவம் மகன் கருப்பசாமி (22) என்பவர் உதவி செய்ததாக கூறப்படுகிறது. அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவு வந்த பின்னர் தான் கவிதாவின் சாவுக்கான முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story