ராஜஸ்தான் ஓட்டலில் தங்கியிருக்கும் மராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு


ராஜஸ்தான் ஓட்டலில் தங்கியிருக்கும் மராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு
x
தினத்தந்தி 11 Nov 2019 4:15 AM IST (Updated: 11 Nov 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தான் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேசினார்.

மும்பை, 

மராட்டியத்தில் தேர்தல் முடிவு வெளியாகி இரண்டு வாரத்திற்கு மேலாகியும் ஆட்சி அமைப்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. இந்த நிலையில், பாரதீய ஜனதா மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முதல்-மந்திரி பதவிகேட்டு குடைச்சல் கொடுத்து வரும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா தனது எம்.எல்.ஏ.க்களை மலாடில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைத்து உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பாலசா கேப் தோரட், முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான் பிரிதிவிராஜ் சவான் உள்பட அக்கட்சியை சேர்ந்த 44 எம்.எல்.ஏ.க்களும் அங்குள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை நேற்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேசினார். அப்போது, மராட்டியத்தில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்தும், ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு குறித்தும் கேட்டறிந்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் உணர்வுகள் குறித்து அவர் கட்சி மேலிடத்துக்கு தெரிவிப்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக் ராவ் தாக்கரே தெரிவித்தார்.

Next Story