ராகிமுத்தஹள்ளி கிராமத்தில் பயங்கரம்: ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கொன்ற விவசாயி கைது
மண்டியா மாவட்டம் ராகிமுத்தஹள்ளி கிராமத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை விவசாயி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஹலகூர்,
மண்டியா மாவட்டம் ராகி முத்தஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜு(வயது 55). விவசாயி. இவருடைய மகன் அனில். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வீணா(24). இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வீணாவுக்கு, அவருடைய மாமனார் நாகராஜு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் வீட்டில் அனில் இல்லாத நேரத்தில் வீணாவின் முன்பு அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சில்மிஷத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் வீணாவை தனது ஆசைக்கு இணங்கும்படி நாகராஜு வற்புறுத்தி உள்ளார். இதனால் வீணா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் இனிமேல் இதுபோல் நடந்து கொண்டால் தனது கணவர் அனிலிடம் இதுபற்றி கூறிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் அவ்வப்போது வீணாவுக்கு, நாகராஜு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அனில் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டார். இதையடுத்து நள்ளிரவில் வீணாவை அழைத்த நாகராஜு தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி உள்ளார்.
அதற்கு வீணா மறுக்கவே, அவரை கட்டாயப்படுத்தி இருக்கிறார். மேலும் கற்பழிக்கவும் முயன்றதாக தெரிகிறது. இதனால் பதறிப்போன வீணா கூச்சல் போட்டுள்ளார்.
இதையடுத்து வீணாவை, நாகராஜு சரமாரியாக தாக்கி உள் ளார். மேலும் தனது ஆசைக்கு இணங்க மறுத்த ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னுடைய மருமகள் என்றும் பாராமல் வீணாவை சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த வீணா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதற்கிடையே வீணாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் வீணா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து இச்சம்பவம் குறித்து மண்டியா மாவட்ட புறநகர் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் வீணாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story