ஈரோட்டில் தனியார் மில் ஊழியர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை
தனியார் மில் ஊழியர் வீட்டில் 18¾ பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஈரோட்டில் தொடர்ந்து திருட்டு-வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளார்கள்.
ஈரோடு,
ஈரோடு கனிராவுத்தர்குளம் கொங்குவேலன்நகர் தட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 44). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு சவிதா (17), தியாஸ்ஸ்ரீ (14) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சண்முகசுந்தரம் தனது குடும்பத்துடன் குமாரபாளையத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றார். அதன்பின்னர் அவர்கள் நேற்று காலை ஈரோட்டிற்கு திரும்பினார்கள்.
அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்தநிலையில் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். பீரோவும் திறந்த நிலையில் கிடந்தது. மேலும் அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 18¾ பவுன் நகையும், ரூ.35 ஆயிரமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், வெள்ளி பொருட்களையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு தட்டாங்காடு பகுதியில் நேற்று முன்தினம் மணி என்பவருடைய வீட்டில் 12½ பவுன் நகையும், ரூ.8 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டது. அதே பகுதியில் சண்முகசுந்தரம் வீட்டிலும் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. எனவே ஒரே கொள்ளையர்கள் இந்த 2 வீடுகளிலும் புகுந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளனர். மேலும், கடந்த 8-ந் தேதி 4 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன. ஈரோட்டில் தொடர் கொள்ளை, நகை பறிப்பு போன்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே கொள்ளையர்களை விரைந்து பிடிப்பதுடன், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story