மாவட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் - பொதுமக்கள் அவதி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதி அடைந்தனர்.
கடலூர்,
நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையாக ரேஷன் கடை ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடைக்கு தனித்துறை அமைக்க வேண்டும். பொருட் களை சரியான எடையில் ரேஷன் கடைகளுக்கு பொட்டலமாக வழங்க வேண்டும்.
ரேஷன் கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப கடைகளுக்கு பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இவர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
இதன்படி இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். கடலூரில் கடைகளை அடைத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் துரைசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் நரசிம்மன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர்கள் கனகசபை, தட்சிணாமூர்த்தி, சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதேபோல் பண்ருட்டி, விருத்தாசலம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஊழியர்கள் கடைகளை அடைத்து இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இருப்பினும் ஒரு சில கடைகள் திறந்து இருந்தன. பெரும்பாலான ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இது பற்றி தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 1,000 ஊழியர்களில் 900 பேர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். எங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றார். இன்று (செவ்வாய்க்கிழமை) கடலூரில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
Related Tags :
Next Story