58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறந்து விடக்கோரி - விவசாயிகள் போராட்டம்; 120 பேர் கைது


58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறந்து விடக்கோரி - விவசாயிகள் போராட்டம்; 120 பேர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2019 4:30 AM IST (Updated: 12 Nov 2019 5:12 AM IST)
t-max-icont-min-icon

58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறந்து விடக்கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமான 58 கிராம கால்வாய் திட்டத்தின் மூலம் 33 கண்மாய்களுக்கும் மற்றும் 3 ஊருணிகளுக்கும் உட்பட்ட சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுகிறது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வரும் நிலையில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனவும், இதற்கு நிரந்தர அரசு ஆணை வழங்க வேண்டுமென்று கோரியும் 58 கிராம கால்வாய்த்திட்ட பாசன விவசாய சங்கத்தினர்கள் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் ஆதரவு தெரிவித்து பேசினர்.

இதில் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி.கதிரவன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சங்கிலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்குழு உறுப்பினர் நல்லகண்ணு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேந்திரன், நகர செயலாளர் குணசேகரபாண்டியன் மற்றும் அக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

உண்ணாவிரத போராட்டத்தைெயாட்டி உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் தேவர் சிலை முன்பு குவிக்கப்பட்டனர். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என்று போலீசார் எச்சரித்தும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அனுமதி பெறாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் 58 கிராம கால்வாய் திட்ட பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஜெயராஜ், செயலாளர் பெருமாள், பொருளாளர் உதயக்குமார், நிர்வாகிகள் சிவப்பிரகாசம், தமிழ்ச்செல்வம் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது சில விவசாயிகள் திடீரென்று அந்த வழியாக வந்த அரசு பஸ் முன்பு படுத்து சாைலமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் கைது செய்த அனைவரையும் உசிலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் கைதான அனைவரும் மண்டபத்திற்குள்ளே தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Next Story