கம்பத்தில், முனீஸ்வரன் கோவில் பீடம் இடித்து அகற்றம் - இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு

கம்பத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாக கூறி முனீஸ்வரன் கோவில் பீடம் இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து அங்கு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம்,
கம்பம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான காலி இடத்தில் பழமையான ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தின் கீழ் முனீஸ்வரன் கோவில் இருந்தது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள், வணிக வளாகங்கள், கோவில்கள் இடித்து அகற்றப்பட்டன. அப்போது முனீஸ்வரன் கோவிலும் இடிக்கப்பட்டது. பின்னர் கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் சிறிய அளவில் பீடம் மற்றும் சூலாயுதம் அமைத்து பக்தர்கள் வணங்கி வந்தனர். இந்நிலையில் சாலையோரத்தில் பீடம் இருப்பதால் வழிபாடு செய்வதில் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீடத்தை அகற்றிவிட்டு கிழக்கு பக்கம் சிறிய அளவில் முனீஸ்வரன் கோவிலை கட்டினர். அதில் சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் கோவிலை ஒட்டினாற்போல் சூலாயுதம் அமைப்பதற்காக புதிதாக பீடம் கட்டும் பணி நடைபெற்றது.
அப்போது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்திற்கு இடையூறாக பீடம் கட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து நகராட்சி கமிஷனர் கமலா உத்தரவின் பேரில் நேற்று கட்டிட ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் வருவாய் அலுவலர் நாகராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சூலாயுதம் அமைக்கும் பணிக்காக கட்டப்பட்ட பீடத்தை நகராட்சி பணியாளர்கள் இடித்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிறியதாக கட்டப்பட்ட முனீஸ்வரன் கோவிலையும் இடிக்க நகராட்சி பணியாளர்கள் முற்பட்டனர்.
இதையடுத்து அங்கு தேனி தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் லோகு தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது அவர்கள், கோவிலை இடிக்கக்கூடாது என்றும், மீறி இடித்தால் சாலைமறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறினர். இதனால் அங்கு வாக்குவாதமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்து முன்னனி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து கோவிலை இடிக்க போவதில்லை என்றும், போக்குவரத்திற்கு இடையூறாக கட்டப்பட்ட சூலாயுதம் அமைக்கவிருந்த பீடத்தை மட்டும் இடித்து அகற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வழிபாடு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story






