‘உள்ளாட்சி தேர்தலில் மேயர்களை மக்களே தேர்வு செய்வார்கள்’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


‘உள்ளாட்சி தேர்தலில் மேயர்களை மக்களே தேர்வு செய்வார்கள்’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 13 Nov 2019 4:45 AM IST (Updated: 12 Nov 2019 11:46 PM IST)
t-max-icont-min-icon

‘உள்ளாட்சி தேர்தலில் மேயர்களை மக்களே தேர்வு செய்வார்கள்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம் வருமாறு:-

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அதிகாரிகளின் பட்டியலை 5 நாட்களுக்குள் அனுப்புமாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதே?

பதில்:- உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தன்னாட்சி அமைப்பு. அந்த அமைப்புக்கு என்று தனி தேர்தல் அதிகாரிகள் இருக்கின்றனர். அந்த தேர்தல் அதிகாரிகள் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்கள். மேலும் உள்ளாட்சி தேர்தலில் மேயரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள்.

கால அவகாசம் குறைவு

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க.வில் முன்கூட்டியே மனுக்கள் வாங்கப்படுகிறதே?

பதில்:- உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் குறைவாக உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அதிக பதவிகள் இருப்பதால் அதிகமானவர்கள் போட்டியிடுகின்றனர். ஆகையால் அவர்களை எல்லாம் பரிசீலித்து கட்சி முடிவு எடுக்க வேண்டும். இதனால் தான் முன்கூட்டியே அ.தி.மு.க.வில் விருப்ப மனு வாங்கி வருகிறோம்.

அ.தி.மு.க.வில் இணைகிறார்கள்

கேள்வி:- அ.தி.மு.க.வில் இணைவது குறித்து அ.ம.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறார்களே?

பதில்:- பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினம் கூட அ.ம.மு.க.வில் இருந்து பலர் விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறார்கள். தொடர்ந்து மாநிலம் முழுவதும் கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

அ.ம.மு.க.வை ஒரு கட்சியாகவே நான் நினைக்கவில்லை. அந்த கட்சியில் பழனியப்பனை ஒரு சாதாரணமானவராகவே நினைக்கிறேன். அ.ம.மு.க.விற்கு தேர்தல் அங்கீகாரம் கொடுத்து இருக்கிறார்களா?, இல்லையே. இன்னும் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. அப்படி இருக்கும் போது அவரை நாம் பொருட்படுத்தவில்லை. அவர் வேறு கட்சிக்கு போவதாக தூதுவிட்டு கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.விற்கு வருவதற்காகவும் தூதுவிட்டதாக கேள்விப்பட்டேன். அவருக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை.

கேள்வி:- கோவையில் கொடிக்கம்பம் சரிந்து ஒரு பெண்ணின் 2 கால்களும் முறிந்துள்ளதாக தகவல் வருகிறதே?

பதில்:- இதுவரைக்கும் இந்த தகவல் எனக்கு வரவில்லை. அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். கொடிக் கம்பம் நட வேண்டாம் என்ற எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை.

கோர்ட்டு உத்தரவு

கேள்வி:- ‘ஹெல்மெட்’ அணியாததற்கு போலீசார் லத்தி வீசிய சம்பவம் குறித்து?

பதில்:- இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி போலீசார் செயல்பட்டு வருகின்றனர். ‘ஹெல்மெட்’ அணியவில்லை என்றால் நின்று போலீசாரிடம் அதற்குண்டான பதிலை சொல்ல வேண்டும். இருதரப்பும் சரியாக நடந்தால் தான் இப்படிப்பட்ட சம்பவத்தை தவிர்க்க முடியும்.

கேள்வி:- அமெரிக்காவில் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் பேசும்போது, மோடி நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறி உள்ளாரே?

பதில்:- இது அவருடைய கருத்து ஆகும். இதில் தவறு இல்லை. மோடி தானே ஆட்சி செய்கிறார். அவர் தானே இந்திய பிரதமராக உள்ளார். மோடியின் பெயரை எல்லோருக்கும் நன்றாக தெரியும் என்பதற்காக அவ்வாறு அவர் கூறி இருக்கலாம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story