டாக்டர் தம்பதி வீட்டில் திருடிய வேலைக்கார பெண், மகனுடன் கைது - 28 பவுன் நகைகள் பறிமுதல்


டாக்டர் தம்பதி வீட்டில் திருடிய வேலைக்கார பெண், மகனுடன் கைது - 28 பவுன் நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Nov 2019 11:15 PM GMT (Updated: 13 Nov 2019 5:23 PM GMT)

டாக்டர் தம்பதி வீட்டில் திருடிய வேலைக்கார பெண், மகனுடன் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 28 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி,


திருச்சி விமானநிலையம் மொராய் சிட்டியில் வசித்து வருபவர் ராஜ்குமார் (வயது 43). இவர் டாக்டர் ஆவார். ராஜ்குமாரின் மனைவியும் டாக்டர். இவர்களது வீட்டில் தொட்டியம் பெரிய நாச்சிப்பட்டியை சேர்ந்த சித்ரா என்கிற சின்னபொண்ணு தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-9-2019 அன்று ராஜ்குமாரும், அவரது மனைவியும் தங்களது மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டில் சித்ரா இல்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜ்குமார், வீட்டில் நகைகள் வைத்திருக்கும் பீரோவை பார்த்தார்.

அப்போது அதில் இருந்த தங்க சங்கிலிகள், வளையல்கள் என மொத்தம் 28 பவுன் நகைகள் திருடு போகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய சித்ராவை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தலைமறைவான சித்ராவை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சித்ராவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது திருடிய நகைகளை திருப்பூரில் உள்ள தனது மகன் கனகராஜிடம் கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். இதைதொடர்ந்து தனிப்படையினர் திருப்பூர் சென்று கனகராஜை கைது செய்தனர். மேலும் 28 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான தாய்-மகன் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். டாக்டர் தம்பதி வீட்டில் நகைகளை திருடிய வேலைக்கார பெண், அவரது மகனை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.

Next Story