போடி அருகே பரபரப்பு: கன்றுக்குட்டி, 22 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தைகள் - மலைக்கிராம மக்கள் பீதி
போடி அருகே கன்றுக்குட்டி மற்றும் 22 ஆடுகளை சிறுத்தைகள் கடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மலைக்கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
போடி,
தேனி மாவட்டம் போடி அருகே முந்தல், குரங்கணி, போடிமெட்டு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கிற மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். மேலும் விவசாயிகள் கால்நடை வளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆடு, மாடுகள் வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்த கிராமங்களையொட்டி உள்ள வனப்பகுதியில் தங்களது ஆடு, மாடுகளை விவசாயிகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். அதேநேரத்தில் வனப்பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, முயல், மான் உள்ளிட்ட விலங்குகளும் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு போடிமெட்டு மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாடுவதை சிலர் பார்த்து மிரண்டனர்.
சமீபத்தில், போடிமெட்டு கிராமத்துக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. அது, நாய் ஒன்றை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நேற்று முன்தினம், முந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி பிச்சைமணி என்பவர் தன்னுடைய 22 ஆடுகளையும், கன்றுக்குட்டி ஒன்றையும் போடிமெட்டு மலைப்பாதை வழியாக மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டிருந்தார். அவை வனப்பகுதியில் மேய்ந்து விட்டு இரவு 7 மணியளவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தன.
அப்போது, முந்தல் கிராமத்தில் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அந்த சத்தத்தை கேட்டு ஆடுகள், கன்றுக்குட்டி மிரண்டு அங்குமிங்குமாக வனப்பகுதிக்குள் பயந்து ஓடின. இதனால் இரவு முழுவதும் ஆடுகள் வீடு திரும்பாததால் அவற்றை பிச்சைமணியும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் நேற்று காலையில் தேடி சென்றனர்.
அங்குள்ள மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை உள்ள வனப்பகுதியில் வழி நெடுகிலும் ரத்தம் சிந்தி கிடந்தது. ஏதோ அசம்பாவிதம் நடந்து இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆடுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் ஆங்காங்கே 22 ஆடுகளும் இறந்து கிடந்தன. அவற்றுடன் சென்ற கன்று குட்டியும் இறந்து கிடந்தது.
இறந்த ஆடுகளின் கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் சிறுத்தைகள் கடித்து குதறியதைப்போல் காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுத்தை நடமாட்டத்தால் மலைக்கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story