கடலூரில், அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கடலூரில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்,
கடலூர் புருகீஸ்பேட்டை பழமலை தெருவை சேர்ந்தவர் சேனாதிபதி மகன் கணபதி (வயது 41). இவர் கடலூர் மஞ்சக்குப்பம் பீச் ரோட்டில் செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க கணபதி வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த மேஜையை காணவில்லை. இதுபற்றி அவர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கடையை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் மஞ்சக்குப்பம் பீச்ரோட்டில் உள்ள மீனவர் வாழ்வுரிமை அலுவலகத்தின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பணம் ஏதும் இல்லாததால், அருகில் உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த 100 ரூபாயை திருடியுள்ளனர்.
பின்னர் அருகில் இருந்த கணபதியின் செருப்பு கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டி இருந்த இரும்பு மேஜையை, கடையின் பின்புறம் உள்ள நகராட்சி அலுவலக வளாகத்துக்குள் தூக்கி சென்றுள்ளனர். தொடர்ந்து கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த 3,200 ரூபாயையும், அங்கு நிறுத்தி வைத்திருந்த சைக்கிளையும் திருடிக் கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story