சூறைக்காற்றில் சிக்கி கல்பேனி தீவில் தவித்த மீனவர்கள் 20 நாட்களுக்கு பிறகு கரை திரும்பினர்


சூறைக்காற்றில் சிக்கி கல்பேனி தீவில் தவித்த மீனவர்கள் 20 நாட்களுக்கு பிறகு கரை திரும்பினர்
x
தினத்தந்தி 15 Nov 2019 4:15 AM IST (Updated: 15 Nov 2019 6:06 AM IST)
t-max-icont-min-icon

சூறைக்காற்றில் சிக்கி கல்பேனி தீவில் தவித்த தமிழக மீனவர்கள் 20 நாட்களுக்கு பிறகு கரை திரும்பினர். கடலில் மூழ்கிய படகுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருங்கல், 

குமரி மாவட்டம் நீரோடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சொந்தமான படகில் செல்வராஜ் மற்றும் கேரள மாநிலம் பூவாரை சேர்ந்த அலெக்சாண்டர், புளியூரை சேர்ந்த சபரியார், மரியநாட்டை சேர்ந்த மேரிவின் சென்ட், நாகை மாவட்டம் சீர்காழி பழையாரை சேர்ந்த குமாரராஜா, வாசுதேவன், செருதூரை சேர்ந்த மோசி,

தூத்துக்குடி மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்த மாரியப்பன், ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை சத்திரத்தை சேர்ந்த கோவிந்தன், நம்புதளையை சேர்ந்த கண்ணதாசன் ஆகிய 10 பேரும் கடந்த மாதம் (அக்டோபர்) 13-ந் தேதி கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் புயல் எச்சரிக்கை தொடர்பாக மீனவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கடலில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் கச்சத்தீவு அருகே கல்பேனி தீவில் கடந்த மாதம் 25-ந் தேதி கரை ஒதுங்கினர். படகை கடலில் ஆழம் குறைந்த பகுதியில் நிறுத்தியிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக மீனவர்களின் படகானது சூறைக்காற்றில் சிக்கி கரையில் வந்து மோதியது. இந்த விபத்தில் படகு பலத்த சேதம் அடைந்துவிட்டது.

எனவே இச்சம்பவம் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தீவில் தவிக்கும் தங்களை எப்படியாவது காப்பாற்றும்படி கேட்டுள்ளனர். ஆனால் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள், அதே தீவில் வசிக்கும் மக்களின் உதவியை நாடியுள்ளனர். மீனவர்களின் பரிதாப நிலையை புரிந்துகொண்ட அப்பகுதி மக்கள் உடனே உதவ முன்வந்தனர். இதனையடுத்து சேதம் அடைந்த படகை மற்றொரு படகு மூலமாக கயிறு கட்டி குமரி மாவட்டம் வரை இழுத்து வரமுடிவு செய்யப்பட்டது. இழுத்து வரும் மற்றொரு படகுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வாடகையும் பேசப்பட்டது.

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 மீனவர்களும் சேதம் அடைந்த தங்களது படகில் ஏறிக்கொண்டனர். அந்த படகை மற்றொரு படகு இழுத்துக்கொண்டு புறப்பட்டது. இவர்கள் கல்பேனி தீவில் இருந்து 130 கடல் மைல் தொலைவில் வந்துகொண்டு இருந்தபோது சேதம் அடைந்த படகுக்குள் திடீரென தண்ணீர் புகுந்து அந்த படகு கடலில் மூழ்க தொடங்கியது. இதனால் பதறிப்போன மீனவர்கள் அலறியடித்துக் கொண்டு கடலில் குதித்து வாடகை படகு மீது ஏறி தப்பித்தனர்.

பின்னர் மீனவர்களின் கண்முன்னே அவர்களது படகு கடலில் மூழ்கி போனது. இதைத் தொடர்ந்து வாடகை படகு மூலமாக 10 மீனவர்களும் நேற்று மதியம் தேங்காப்பட்டணம் துறைமுகம் வந்து சேர்ந்தனர். 20 நாட்களுக்கு பிறகு பத்திரமாக வீடு திரும்பிய மீனவர்களை அவர்களுடைய உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இதுபற்றி கரை திரும்பிய மீனவர்களிடம் கேட்டபோது, “நாங்கள் நடுக்கடலில் 45 நாட்களில் இருந்து 50 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்போம். ஆனால் தற்போது புயல் எச்சரிக்கை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சூறைக்காற்றில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். அப்போது எங்களது வலைகள் அறுந்துவிட்டன. பேய் காற்றில் படகும் சேதம் அடைந்துவிட்டது. எனினும் படகை எப்படியாவது சொந்த ஊருக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று போராடினோம். இருந்தாலும் எங்களால் படகை காப்பாற்ற முடியவில்லை. அது கடலில் மூழ்கிவிட்டது. எனவே எங்களுக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும் பேரிடர் காலங்களில் உடனுக்குடன் தகவல்கிடைக்க நவீன தகவல் பரிமாற்ற கருவிகளையும் மீனவர்களுக்கு வழங்க வேண்டும்“ என்றனர்.

Next Story