அரியலூரில் துணிகரம்: மாரியம்மன் கோவிலில் 40 பவுன் நகைகள் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
அரியலூர் மாரியம்மன் கோவிலில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர்,
அரியலூர் மேலத்தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி லோகாம்பாள் (வயது 70) என்பவர் தினமும் திறந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் நேற்று காலை லோகாம்பாள் கோவிலை திறந்தபோது, கோவிலில் உள்ள சிறிய அளவிலான பீரோ உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கும், ஊர் மக்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து கோவிலுக்கு வந்த நிர்வாகிகள், பீரோவை பார்த்தபோது அதில் அம்மனுக்கு அலங்காரம் செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அரியலூர் போலீசார் கோவில் முழுவதும் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். தொடர்ந்து பெரம்பலூரில் இருந்து மோப்பநாய் டெக்சி வரவழைக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் அது மோப்பம் பிடித்துவிட்டு, ரெயில் நிலையம் அருகே உள்ள சிவன் கோவில் வரை சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் சத்தியராஜ், துர்கா ஆகியோர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோவில் பூசாரி கூறுகையில், இந்த கோவிலில் கடந்த 11-ந் தேதி அன்னாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஏராளமான நகைகளை கொண்டு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை பார்த்த மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம், என்றார். கொள்ளை சம்பவத் தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story