என்.எல்.சி. தொழிலாளியிடம் வழிப்பறி: குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது


என்.எல்.சி. தொழிலாளியிடம் வழிப்பறி: குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2019 10:30 PM GMT (Updated: 14 Nov 2019 9:42 PM GMT)

நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்,

நெய்வேலி கைக்கிளார்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவர் கடந்த அக்டோபர் மாதம் 14-ந் தேதி இரவு திரவுபதி அம்மன் கோவில் வழியாக மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போன், ரூ.500-யை வழிப்பறி செய்து விட்டு தப்பிச்சென்றனர். இது பற்றி செல்வம் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நெய்வேலி 21-வது வட்டம் இஸ்மாயில் தெரு கமால்பாஷா மகன் பாரூக்பாஷா (23), முருகன் தெரு ரவிச்சந்திரன் மகன் சத்தியசீலன் (24) ஆகிய 2 பேரும் சேர்ந்து செல்வத்திடம் செல்போன், பணத்தை வழிப்பறி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின்பேரில் பாரூக் பாஷா, சத்தியசீலன் ஆகிய 2 பேரையும் நெய்வேலி தெர்மல் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர். கடலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சிறுமிகள் பாலியல் பலாத்காரம், சாராயம் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 100 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story