உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
கரூர்,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி அமைப்புக்கான பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் நவம்பர் 15-ந்தேதி மற்றும் 16-ந்தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. அலுவலகங்களில் அதற்கான கட்டண தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்களை, கரூர் செங்குந்தபுரத்திலுள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வினியோகம் செய்து தொடங்கி வைத்தனர். கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் ஆர்வத்துடன் வருகை தந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்ப படிவங்களை பெற்றனர். இதில் கீதா எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் பாப்பாசுந்தரம், மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் கே.சி.எஸ்.விவேகானந்தன், நகர செயலாளர்கள் நெடுஞ்செழியன், வி.சி.கே.ஜெயராஜ், வெங்கமேடு பாண்டியன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.வி.செந்தில்நாதன், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசுதன் கலந்து கொண்டனர்.
நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரம், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500-ம், பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500-ம், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.3 ஆயிரம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக பெறப்பட்டது. பின்னர் அந்தபடிவத்தில் எந்த பொறுப்புக்கு போட்டியிடுவது மற்றும் பெயர், விலாசம் உள்ளிட்ட சுயவிவரங்களை குறிப்பிட்டு பூர்த்தி செய்த விருப்ப மனுக்களை அ.தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மு.தம்பிதுரை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் கொடுத்தனர். விருப்ப மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு கரூரில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர். விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு அதற்குரிய ரசீது வழங்கப்பட்டது.
முன்னதாக மு.தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே, தேர்தலை எப்படியாவது நடத்த வேண்டும் என எண்ணி கொண்டிருந்தார். அப்போது தான் தி.மு.க.வினர் தேர்தலை நடத்தக்கூடாது என்கிற நோக்கில் நீதிமன்றத்தை நாடி தேர்தலை நிறுத்தி வைத்தார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் கூட, உள்ளாட்சி தேர்தலை நடத்திட தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் பேரில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு விருப்ப மனுக்களை வாங்கி வருகிறோம்.
தற்போது கரூரில் பெறப்படும் விருப்ப மனுக்கள் தலைமை கழகத்தில் சமர்ப்பிக்கப்படும். அவர்கள் மனுக்களை பரிசீலித்து இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார்கள். மக்கள் ஆதரவின் மூலம் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியானதாக உள்ளது. தமிழக அரசியலில் வெற்றிடம் என்பது கிடையாது. வெற்றிடம் என்றால் மேலோகத்தில் இருக்கிறது. அங்கே போய் தேடி பார்க்கலாம். மு.க.ஸ்டாலின் தேர்தல் தோல்வி பயத்தில், தேர்தல் ஆணையர் மாற்றம் குறித்த குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்றார்.
Related Tags :
Next Story