அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் விபத்தில் சிக்கிய கோவை பெண்ணின் இடதுகால் அகற்றம்


அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் விபத்தில் சிக்கிய கோவை பெண்ணின் இடதுகால் அகற்றம்
x
தினத்தந்தி 16 Nov 2019 4:30 AM IST (Updated: 15 Nov 2019 11:32 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் லாரி மோதி படுகாயம் அடைந்த கோவையை சேர்ந்த ராஜேஸ்வரியின் இடது கால் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கோவை,

கோவை சிங்காநல்லூர்பகுதியை சேர்ந்தநாக நாதன் என்பவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 31). இவர் கோவைசின்னியம் பாளையம்ப குதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கணக்காளராக வேலை செய்துவந்தார். கடந்த 11-ந் தேதி காலை ஸ்கூட்டரில் வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டார். கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் சாலை தடுப்பு பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதில் ஒருகொடிக்கம்பம் திடீரென்று சாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த ராஜேஸ்வரிதன் மீது கொடிக்கம்பம் விழாமல் தவிர்ப்பதற்காக திடீர் பிரேக் போட்டுள்ளார். இதனால் நிலைத்தடுமாறிய அவர் ஸ்கூட்டருடன் சறுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று ராஜேஸ்வரியின் கால்கள் மீது ஏறியது. அவரது இரண்டு கால்களும் லாரி சக்கரத்தில் சிக்கியதால் கால்கள் நசுங்கி படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த லாரி வலதுபுறம் ஏறி நின்றது.

ராஜேஸ்வரியின் ஸ்கூட்டர் லாரி சக்கரத்துக்குள் மாட்டிக்கொண்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விஜயானந்த் (30) என்பவரும் லாரியில் மோதி காயம்அடைந்தார். கால்கள் முறிந்து படுகாயம் அடைந்த ராஜேஸ்வரிக்கு கோவை நீலாம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடதுகாலின் மூட்டு பகுதி சிதைந்த நிலையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த மருத்துவமனையின் டாக்டர்கள் கூறியதாவது:-

விபத்தில் சிக்கிய பெண்ணின் 2 கால்களையும் காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் இடது காலில் தசைகள் சிதைந்து, எலும்புகள் முறிந்து இருந்தது.அந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற வேண்டிய நிலையில், இடது காலின் தொடை பகுதியில் இருந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆபரேஷன் செய்து இடதுகால் அகற்றப்பட்டுள்ளது.செயற்கை கால்பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வலது காலின் எலும்புகள் முறிந்துஇருந்தாலும் அந்த காலை காப்பாற்றி விடுவோம். ராஜேஸ்வரி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.

மகளின் இடதுகால் அகற்றப்பட்டு உள்ளதால் தந்தை நாகநாதன், தாய் சித்ரா மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.

தொடர்ந்து மருத்துவமனையில் லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் நிலைஏற்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினர் நிவாரண நிதி உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.

Next Story