மோட்டார்சைக்கிள் மீது மினி லாரி மோதி 2 வாலிபர்கள் பலி ; நண்பரின் பிறந்தநாளுக்கு கேக் வாங்கி வந்த போது சோகம்


மோட்டார்சைக்கிள் மீது மினி லாரி மோதி 2 வாலிபர்கள் பலி ; நண்பரின் பிறந்தநாளுக்கு கேக் வாங்கி வந்த போது சோகம்
x
தினத்தந்தி 16 Nov 2019 4:15 AM IST (Updated: 16 Nov 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

நண்பரின் பிறந்தநாளுக்கு கேக் வாங்கி விட்டு வந்த போது மோட்டார்சைக்கிள் மீது மினிலாரி மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராயக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள தாண்டரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தப்பா. இவருடைய மகன் கணே‌‌ஷ் (வயது 18). போடிச்சிப்பள்ளியை சேர்ந்த கோபலட்டா என்பவருடைய மகன் கிரி‌‌ஷ்குமார் (20). கணேசும், கிரி‌‌ஷ்குமாரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும், இவர்கள் இருவரும் கெலமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு இருவரும் வேலையை முடித்து விட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். வழியில் அவர்களுடைய நண்பர் அசோக் என்பவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கேக் வாங்கினர். பின்னர் இருவரும் மோட்டார்சைக்கிளில் கெலமங்கலம்-ஓசூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஓசூரில் இருந்து கெலமங்கலம் நோக்கி வந்த மினிலாரி ஒன்று அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசும், கிரி‌‌ஷ்குமாரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கெலமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாவித்திரி மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கணே‌‌ஷ், கிரி‌‌ஷ்குமார் ஆகியோரது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய மினிலாரி டிரைவரை தேடி வருகின்றனர். நண்பரின் பிறந்தநாளுக்கு கேக் வாங்கி விட்டு வந்த போது மினிலாரி மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் ராயக்கோட்டை அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story