ராமேசுவரத்தில் சாலை அமைக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஹெல்மெட் அணிந்து போராட்டம்
ராமேசுவரத்தில் சாலை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஹெல்மெட் அணிந்து போராட்டம் நடத்தினர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் நகராட்சிக்குட்பட்ட சல்லிமலை, பாரதிநகரில் புதிதாக சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டுள்ளது. பல நாட்களாகியும் இது வரையிலும் சாலை அமைக்கப்படாததால், ஜல்லிக்கற்கள் சாலைமுழுவதும் பரவி கிடப்பதால், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள், வயதானவர்கள் என அனைவருமே இருசக்கரவாகனத்திலும், நடந்தும் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் சாலை பணிகளை தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் சிவா தலைமை தாங்கினார்.
மாவட்ட குழு உறுப்பினர் கருணாகரன், தாலுகாகுழு உறுப்பினர்கள் கருணாமூர்த்தி, மாரிமுத்து, ராமச்சந்திரபாபு, வெங்கடேசுவரி, அசோக் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் சல்லிமலை பகுதியிலிருந்து காலில் சாக்குகளையும், தலையில் ஹெல்மெட்டையும் அணிந்தபடி ஊர்வலமாக திட்டக்குடி சாலை வழியாக நகராட்சி அலுவலகத்திற்கு வந்து போராட்டம் நடத்தினர்.
நகராட்சி அலுவலகம் வந்த அவர்கள் நகராட்சி அலுவலக அதிகாரிகளிடம் மனுவை கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அந்த பகுதியில் விரைந்து சாலை பணிகளை முடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.
Related Tags :
Next Story