திருக்கோவிலூர் அருகே, டாஸ்மாக் கடையில் பணம்-மதுபாட்டில்கள் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


திருக்கோவிலூர் அருகே, டாஸ்மாக் கடையில் பணம்-மதுபாட்டில்கள் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Nov 2019 3:45 AM IST (Updated: 16 Nov 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே டாஸ்மாக் கடையில் பணம் மற்றும் மதுபாட்டில்கள் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே மாடாம்பூண்டி கூட்டுரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் பாடியந்தல் கிராமத்தை சேர்ந்த திருலோகச்சந்தர் (வயது 44), ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (41) ஆகியோர் விற்பனையாளர்களாகவும், பொ.மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு (51) என்பவர் மேற்பார்வையாளராகவும் பணி புரிந்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மதுபாட்டில்கள் விற்பனையான தொகையை எடுத்துக் கொண்டு, கடையை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடையின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்துக்கும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டாஸ்மாக் கடையை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் டாஸ்மாக் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. ஆயிரம் மதிப்புள்ள சில்லரை நாணயங்கள் மற்றும் 48 மதுபாட்டில்களை மட்டும் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மதுபாட்டில்கள் விற்பனையான பெரும் தொகையை ஊழியர்கள் எடுத்து சென்றதால் அந்த பணம் திருடு போகாமல் தப்பியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர் அடுத்த கொள்ளுர் அங்காளம்மன் கோவிலில் கடந்த வாரம் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். கடந்த சிலநாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்த 2 டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாடாம்பூண்டி கூட்டு ரோடு டாஸ்மாக் கடையில் பணம் மற்றும் மதுபாட்டில்கள் திருடு போயுள்ளது. திருக்கோவிலூர் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Next Story