ஏலகிரி தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த வேலூர் ரவுடி கைது
தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வேலூரை சேர்ந்த ரவுடி வானூர் அருகே கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜோலார்பேட்டை,
வேலூர் மாவட்டம் ஏலகிரி அருகே உள்ள ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் அருட் செல்வம். தொழில் அதிபர். இவரை கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கும்பல் கடத்தி சென்று ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது.
பின்னர் ஏலகிரி போலீசார் நடவடிக்கை எடுத்து தொழில் அதிபர் அருட்செல்வத்தை மீட்டனர். மேலும் இந்த கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ரவி என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த கடத்தல் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடியான ஆட்டோ டிரைவர் சம்பத் (வயது 40) என்பவர் சம்பந்தப்பட்டு இருப்பதும், அவரை போலீசார் தேடியபோது தலைமறைவானதும் தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் சம்பத் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து அவருடைய இருப்பிடத்தை அறிய நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது அவர் புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் இரும்பை கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது.
உடனே ஏலகிரி போலீசார் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உதவியுடன் இரும்பை கிராமத்தில் உள்ள ஒரு சிற்பக்கூடத்தில் பதுங்கி இருந்த சம்பத்தை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் சிற்பக்கூடத்தின் உரிமையாளர் ஏலகிரிக்கு சுற்றுலா சென்றபோது ஆட்டோ டிரைவர் சம்பத்துடன் பழக்கம் ஏற்பட்டதும், அ்தை பயன்படுத்தி சிற்பக்கூடத்துக்கு வந்து சம்பத் பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது.
பிடிபட்ட சம்பத்திடம் போலீசார் சோதனை நடத்தியபோது அவரிடம் 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. மொத்தம் ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு கள்ள நோட்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவற்றை புதுச்சேரியிலும், விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் சம்பத் ஒப்படைக்கப்பட்டார். இந்த கள்ள நோட்டுகள் அவருக்கு எப்படி கிடைத்தது? எந்த ஊர்களில் எல்லாம் அவர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டார்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story